Monday, February 10, 2020

ATTAVEERATTA STHALANGAL. அட்டவீரட்ட ஸ்தலங்கள்

அட்டவீரட்டானம் என்பது இறைவனின் வீரத் திருவிளையாடல்கள் இடம்பெற்ற எட்டுத் தலங்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாடலாகும். சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்களை வீரட்டானத் தலங்கள் என்று போற்றுவர். பகைவர்களின் வீரத்தை அட்டு ஆன இடம் என்ற வகையிலும், தன் வீரத்தால் அட்டு ஆன இடம் என்ற வகையிலும் வீரட்டானம் என்னும் சொல் அமைந்தது. இவை எட்டுத் தலங்களாதலால் அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது

  1. திரு கண்டியூர்: சிவபிரான் பிரமனுடைய தலையைக் கொய்து செருக்கழிந்த தலம்
  2. திருக்கோவலூர் : அந்தகாகரனைக் கொன்ற இடம்
  3. திருவதிகை : திரிபுரத்தை எரித்த இடம்
  4. திருப்பறியலூர் : தக்கன் தலையைத் தடிந்த தலம்
  5. திருவிற்குடி : சலந்தராசுரனை வதைத்த தலம்
  6. திருவழுவூர் : கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
  7. திருக்குறுக்கை : மன்மதனை எரித்த தலம்
  8. திருக்கடவூர் : மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்









1.திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீஸ்வரர்


தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்டியூர். இந்த பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்ம சிரகண்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற தலமாக விளங்கும் இந்தக் கோவிலில் இறைவனாக பிரம்ம சிரகண்டீஸ்வரரும், இறைவியாக மங்களநாயகியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

ஸ்தல வரலாறு :

ஒரு சமயம் பிரம்ம தேவர், தான் படைத்த ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார். உடனே அந்த பெண் அம்பாளிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டார். அம்பாள், சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு, உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பின்னர் பிரம்மாவின் ஒரு தலையை நகத்தினால் கொய்து கண்டனம் செய்தமையினால் இந்த ஊர் கண்டியூர் என்று பெயர் பெற்றது.

தன் தவறை உணர்ந்த பிரம்மதேவர், சிவனிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார். சிவனும், பிரம்மாவின் தவறை மன்னித்து அருளினார். பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

பிரம்மஹத்தி தோஷம் :

மேலும் சிவபெருமான் துண்டித்து பிரம்மதேவரின் தலை, அப்படியே ஈசனின் கையில் ஓட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அறநெறியை உலகத்தவரும் உணர்ந்து கடைபிடிக்குமாறு தாமே அதனை கடைபிடித்து காட்ட சிவபெருமான் எண்ணினார். அதன்படி, பைரவரை பார்த்து இத்தீவினை தீர நீயும் பிச்சை ஏற்க வேண்டும் என்று கூறினார். பைரவர் பல சிவ தலங்களுக்கும் சென்று பிச்சை கேட்டு திரிந்தார்.

கண்டியூருக்கு வந்து இந்தக் திருக்கோவிலை அடைந்தவுடன் அத்தலை, சிவபெருமானின் கையை விட்டு போனது. பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இதனையடுத்து பிரம்மதேவர் ஆணவமின்றி தன் துணைவியும் தானுமாய் இக்கோவில் இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்பு தொழிலை பெற்றார் என்கிறது தலவரலாறு.

பிரம்மனுக்கு தனிக் கோவில் :

ஆணவமுற்றோர் அழிவர் என்னும் உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சி நடந்த இடம் கண்டியூர் ஆகும். எத்தலத்திலும் பிரம்மனுக்கு தனிக் கோவில் கிடையாது. ஆனால் திருக்கண்டியூரில் பிரம்ம தேவருக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. இதில் பிரம்மன், தன் பிழையை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலை ஏந்தி இருகைகளும் வேண்டுகின்ற அமைப்பில் வைத்து வலப்பக்கத்தில் சரஸ்வதியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கிறார்.

பிரம்மா அன்னப்பறவையாக சென்று சிவபெருமானது முடியை கண்டதாக பொய் கூறிய காரணத்தால் ‘உனக்கு எங்கும் கோவில் இல்லாமல் போகக்கடவாய்’ என்று சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்திற்கு ஏற்ப இங்கு பிரம்மனுக்கும் பெரிய கோவில் இருந்தும், இடிபாடுகளுடன் வழிபாடில்லாது இருப்பது சிவ சாப வன்மை போலும்.

பிரம்மனது கோவிலுக்கு பக்கமே அரன் சாபம் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை புரியும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய கோவில்கள் உள்ள தலம் இதுவே.

துவார பாலகர்கள் இல்லை :

துரோணர் தமக்கு மகப்பேறு இல்லாத குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து மகப்பேறு எய்தினார். இந்த தலம் அட்ட வீரட்ட தலங்களில் முதல் தலமாகவும், சப்தஸ்தான தலங்களில் 5–வது தலமாகவும் போற்றப்படுகிறது.

எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பது போல் இத்தலத்தில் துவார பாலகர்கள் இல்லை. முருகப்பெருமான் ஞான குருவாக இத்தலத்தில் வீற்றிருக்கிறார்.

அர்த்தமண்டப வாசலுக்கு வலது புறத்தில் சப்தஸ்தான தலங்களை குறிக்கும் வகையில் 7 லிங்கங்களும், பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் 5 லிங்கங்களும் உள்ளன. பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலது கையில் ஜெபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு காட்சி அளிக்கிறார். மயில் வாகனம் இங்கு இல்லை.

நவக்கிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியரான உஷா, பிரத்யூஷாவுடன் வீற்றிருக்கின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனை பார்த்த படி உள்ளன. தவறு செய்து விட்டு மனம் வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருமணம் தடை உள்ளவர்கள் வாழைக்கன்றில் மஞ்சள் கயிற்றை கட்டி இங்குள்ள இறைவனை வேண்டினால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம்.
தஞ்சாவூர் – திருவையாறு செல்லும் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் கண்டியூர் அமைந்துள்ளது.

காலை 6மணி முதல் 12மணி
மாலை 4மணி முதல் 8.30 வரை

தொடர்பு.  04362261100. 2622222
மணிகண்ட குருக்கள் 9865302750
நன்றி. எஸ் ராஜா (அக்னி) தொகுப்பு



2.  பண்ருட்டி



தேவார பாடல் :
கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்-கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய்! அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன், எப்பொழுதும்;
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன், அடியேன்:-அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே!

திருக்கெடிலம் என்னும் ஆற்றிற்கு வடபால் விளங்கும் திருவதிகையில் உள்ள திருவீரட்டானம் எனப் பெயரிய மாநகராகிய திருக்கோயிலுள் எழுந்தருளிய சிவபெருமானே, அடியேனுக்கு மருளும் பிணி மாயை ஒரு கூற்று ஆயினவாறு வந்து வருத்தும் சூலை நோயை விலக்கமாட்டீர். (இந்நோயை அடைதற்கு அடியாகக்)கொடுமை பல செய்தன (உளவோ எனின், அவற்றை) நான் அறியேன். விடையானே. இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாமல் (நின்) அடி (மலர்)க்கே வணங்குவன். இந்நோய் என் வயிற்றின் உள்ளே அடியில் பற்றித் தன்னைத் தோற்றாமல் குடரொடு துடக்குண்டு என்னை முடக்கியிடலால், அடியேன் ஆற்றாமல் வருந்துகின்றேன். இவ்வருத்தம் அகற்றி அடியேனை ஆட்கொண்டருள்வாய் என அப்பரால் பாட பெற்றது.

அப்பர் மொத்தம் 16 பதிகம் பாடியுள்ளார். இது தவிர, சுந்தரரும், ஞானசம்பந்தரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர்.

ஊர்: திருவதிகை,பண்ருட்டி அருகில். பழைய பெயர் - அதிகாபுரி, திருஅதிகை வீரட்டானம்

மூலவர்: அதிகை வீரட்டேஸ்வரர்

அம்பாள்: திரிபுர சுந்தரி

ஸ்தல விருட்சம்: சரங்கொன்றை

தீர்த்தம்: சூலத்தீர்த்தம்

வழிபட்டோர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர்.

ஸ்தல வரலாறு : சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார்.தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர். இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள். வானவர்களைக் கடுந்துயருக்கு ஆளாக்கிய இம்மூவரையும் யாராலும் வெல்ல முடியவில்லை. மேலும் அவர்கள் சிவ பக்தர்களாகவும் திகழ்ந்தார்கள். எனவே அவர்களை சிவபெருமான் மட்டுமே அழிக்க முடியும் என்று கருதிய தேவர்கள், பிரம்மனுடனும், திருமாலுடனும் சென்று சிவபெருமானை வேண்டினர். உடனே இறைவன் இட்ட ஆணைப்படி தேவதச்சன் விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்க, வில் அம்பு சகிதமாக (மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்ததாம்) நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான். “தேவர்களையும் காக்க வேண்டும், சிறந்த சிவ பக்தர்களாகிய அந்த அரக்கர்களையும் வதம் செய்யக் கூடாது’ என்று கருணை கொண்ட இறைவன், வில்லை வளைக்காமல், நாணைப் பூட்டாமல் அண்ட சராசரங்கள் நடுங்கும் வண்ணம் ஒரு புன்னகை செய்தார். அப்போது தோன்றிய அக்னியினால் முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின. தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் அந்த திரிபுராந்தக மூர்த்தி.

ஆலய சிறப்புகள்: சைவத்துக்குத், திருத்தொண்டுக்கு உறைப்பான திருநாவுக்கரசரை வழங்கியருளிய பெருமைமிகு தலமிதுவே.இவர் முதன்முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று. திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்த தலம். ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம். அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.திலகவதியார் தன் தம்பியாகிய (அப்பர்) மருள்நீக்கியாரை நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுறைத்த பதி.

சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.

இக்கோயிலில் உள்ள முருகபெருமானை திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார். மிக பிரமாண்டமான அழகிய சிற்பங்கள் கொண்ட அற்புதமான கோயில்.

தரிசன பயன்கள்: வயிற்று வலி (அல்சர்) உபாதைகள் சூலைத் தீர்த்தம் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.

எப்படி செல்வது : கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் சென்று திருவதிகை கோவில் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. சென்றால் அதிகை வீரட்டேஸ்வரர் கோவிலை அடையலாம். பண்ருட்டிக்கு அருகில் சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை, கடலூர், விருத்தாசலம், விழுப்புரம், சிதம்பரம் முதலிய ஊர்களிலிருந்து பண்ருட்டிக்குப் பேருந்து வசதி உள்ளது.
ரன்

தரிசன நேரம் :.காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்

தொடர்பு. 9443988779. 9442780111. 9841962089
நன்றி திரு. எஸ். ராஜா (அக்னி) தொகுப்பு



3.  திருக்கோவிலூர் வீரட்டேசுவரர் திருக்கோயில்
கீழையூர். 

இச்சிவத்தலத்தின் மூலவர் வீரட்டேசுவரர், தாயார் பெரியநாயகி
உற்சவர். அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை இருவருக்கும் அவ்வையும், கபிலரும் திருமணம் செய்து வைத்த தலம்.

அந்தகாசூரன் எனும் அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் போர் நடைபெறும் பொழுது அசுரனின் குருதியிலிருந்து அசுரர்கள் தோற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை தடுப்பதற்காக சிவபெருமான் 64 பைரவர்களை உருவாக்கினார். அறியாமை எனும் இருளான அந்தாகசூரனை அழித்து சிவபெருமான் வீரட்டேஸ்வரராக மெய்ஞானத்தினை அருளிய தலம்.
.  சப்த கன்னியர் அவதரித்த தலம்.   .   வாகனமின்றி பைரவர் திருமேனி.

தன் பூவுலக வாழ்வை முடித்துக் கொண்டு திருக்கயிலாயம் செல்வதற்காக ஈசனை உருகி வேண்டிக்கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதையடுத்து ‘ஐயிராவதம்’ என்னும் வெள்ளை யானையை ஈசன் அனுப்பினார். அதில் ஏறிய சுந்தரர் கயிலாயம் புறப்பட்டார்.

அவரோடு, அவரது நண்பரான சேரமான் பெருமானும், குதிரையின் காதில் பஞ்சாட்சரம் ஓதி, குதிரையில் ஏறி கயிலாயம் சென்றார். இருவரும் வானில் சென்றபோது, கீழே திருக்கோவிலூர் என்ற சிவதலத்தில் வீற்றிருக்கும் தல விநாயகரை, அவ்வையார் வழிபட்டுக் கொண்டிருந்தார்.

அவரிடம் சுந்தரரும், சேரமானும், ‘அவ்வையே! நாங்கள் கயிலாயம் செல்கிறோம். நீயும் வருகிறாயா?’ என்று கேட்டனர்.

கயிலாயம் செல்லும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது! ‘நானும் வருகிறேன்’ என்று கூறிய அவ்வை, விநாயகர் வழிபாட்டை அவசரம் அவசரமாக முடிக்க எண்ணினார்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அது விநாயகரின் குரல். ‘அவ்வையே! நீ எனது பூஜையை வழக்கம்போல் பொறுமையாகவே செய். வழிபாடு முடிந்ததும், சுந்தரர், சேரமான் இருவருக்கும் முன்பாக உன்னை கயிலாயத்தில் சேர்க்கிறேன்’ என்றார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அவ்வை, ‘சீதக்களபச் செந்தாமரைப் பூம்பாதச் சிலம்பு பல இசை பாட...’ எனத் தொடங்கும் ‘விநாயகர் அகவல்’ பாடி விநாயகரை வழிபட்டார்.

அவ்வையார் ‘விநாயகர் அகவல்’ பாடி முடித்ததும், அவர் முன் விநாயகர் தோன்றி, தனது துதிக்கையால் அவ்வையை ஒரே தூக்கில் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்ப்பித்து விட்டார். விநாயகர் துதிக்கையால் அவ்வையாரை திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்த பிறகுதான், சுந்தரமூர்த்தி சுவாமிகளும், சேரமான் பெருமானும் திருக்கயிலாயம் வந்தடைந்தனர் என்பது வரலாறு.

அவ்வையாரை இத்தல விநாயகர், விஸ்வரூபம் எடுத்து தனது துதிக்கையால் திருக்கயிலாயம் கொண்டு போய் சேர்த்ததால், ‘பெரிய யானை கணபதி’ என்று அழைக்கப்படுகிறார். இவ்விநாயகர் திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்தல ஈசன் வீரட்டேஸ்வரர்.

தல பெருமை :

கொன்றையும், வில்வமும் தல மரங்களாக உள்ளன.
 மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி செய்த அருட்பதி இதுவாகும்.
 ராஜராஜ சோழன் பிறந்த ஊர் இது. ராஜராஜ சோழனின் சகோதரி, இந்த ஆலயத்திற்கு விளக்குகள் ஏற்றிட நிதி வழங்கினார் என கல்வெட்டு சான்று பகிர்கிறது.
 இத்தல தீர்த்தம் தென்பெண்ணை ஆகும். கபிலர் வழிபட்ட தலம் இது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் கபிலர் குகைக்கோவில் அமைந்துள்ளது.

இத்தல ஈசனும், அம்பாளும் மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கையை ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண மற்றும் சுப காரியத் தடங்கல்கள் அகலும். வறுமை அகன்று வசந்தங்கள் ஓடிவரும். பிணி நீங்கி வளங்கள் நம்மை வந்து சேரும். தீவினைகள் அண்டாது. ‘துர்க்கா சப்த ஸ்லோகி’ என்ற ஸ்தோத்திரத்தை ராகு கால வேளைகளில் படித்து வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரின் பாடல் பெற்ற தலம். சப்த கன்னிகளும், 64 வித பைரவர்களும் தோன்றிய தலம். பைரவ உபாசகர்களுக்கு முதன்மையான கோவில் இது என பல்வேறு சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த ஆலயம். இத்தலத்தில் ஈசனே, பைரவ வடிவம் என்பதால் தேய்பிறை அஷ்டமி நாளில் வீரட்டேஸ்வரரை வழிபட்டால் தீவினைகள் அகன்று, செல்வங்கள் தேடி வரும்.

வாஸ்து பகவான் அந்தகாசுர சம்ஹாரத்தில் தோன்றிய ஸ்தலம். வாஸ்து தோஷ பரிகாரங்களுககு உகந்த ஸ்தலம்.

பார்க்கவன் எனும் அசுர குரு கோடி மிருத்திங்க மந்திர ஜபம் செய்து சுக்ராச்சாரியார் ஆகிய ஸ்தலம். சுக்கிர ப்ரீதி ஸ்தலம்.


வழிபட்ட தெய்வங்கள் :

இந்த ஆலயத்தில் விநாயகர், முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிஷி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் பஞ்சபூத லிங்கங்கள், விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், சந்திரசேகரர், லிங்கோத்பவர் ஆகிய மூர்த்தங்கள் அருள் நிறைந்தவையாகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று, இங்குள்ள பெரிய யானை கணபதி சன்னிதியில், அவ்வையார் பாடிய ‘விநாயகர் அகவல்’ பாடி வழிபட்டால் வேண்டியவை அனைத்தும் நடைபெறும்.

திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் உள்ளது. பண்ருட்டி, கடலூர், கள்ளக்குறிச்சி. விழுப்புரத்தில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

கோவில் காலை 6.00மணி முதல் 11மணி வரை மாலை 4 முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.
குருக்கள். திரு சுந்தரமூர்த்தி சிவாசாரியார்.
9842623020. 
நன்றி எஸ்.ராஜா.(அக்னி)
தொகுப்பு

4.திருபறியலூர் வீரட்டானேஸ்வரர்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நகரின் அண்மையில் செம்பொன்னார்கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிமீ அமைந்துள்ளது.

மூலவர்:வீரட்டேசுவரர், தட்சபுரீசுவரர்
உற்சவர். வீரபத்திரர்.
தாயார்:இளங்கொடியம்மை, இளங்கொம்பனையாள்
தலவிருட்சம்:பலா, வில்வம்
தீர்த்தம்:உத்தரவேதி, சந்திர புஷ்கரிணி

கோயிலைச் சுற்றி பசுமையான வயல்கள் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவாயிலில் இறைவனும், இறைவியும் காளையில் அமர்ந்திருக்க வலப்புறம் விநாயரும், இடப்புறம் சுப்பிரமணியரும் சுதை வடிவில் உள்ளனர். மேற்கு நோக்கிய நிலையில் கோயில் உள்ளது. ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம், நந்தி மண்டபம் காணப்படுகின்றன. மூலவராக வீரட்டானேஸ்வ்ரர் உள்ளார். மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கோஷ்ட கணபதி உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறைச்சுவற்றில் தட்சன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் மகாகணபதி, செந்தில் ஆண்டவர், மகாலெட்சுமி உள்ளனர். இடப்புறம் கற்பக விநாயகர், சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உள்ளனர். வெளி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய நிலையில் மூலவர் சன்னதியின் வலப்புறம் பாலாம்பிகை எனப்படும் இளங்கொம்பனையாள் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தி, பலிபீடம் உள்ளன. அம்மன் சன்னதியை அடுத்து கஜசம்ஹாரமூர்த்தி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் காசி விசுவநாதர் சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக வலப்புறம் கால பைரவரும், இடப்புறம் நர்த்தன கணபதியும் உள்ளனர். திருச்சுற்றில் தொடர்ந்து சேத்திரபாலர், சிவசூரியன் உள்ளனர். தட்சனோடு தேவாதி தேவர்களையும் இறைவன் போர் புரிந்ததால் சூரியனுக்கு பின்னம் ஏற்ப்பட்டது.  நவக்கிரகங்கள் இங்கே கிடையாது.
காவிரி தென்கரை தலங்கள் 
 திருப்பறியலூர் வீரட்டானம் தற்போது பரசலூர் , கீழப்பரசலூர்

* தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 41வது தலம்.
* அட்ட வீரட்டானத் தலங்களில் நான்காவது தலம்
* சிவனார் வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தை அழித்து , தட்சனையும் சம்ஹரித்த தலம் 
* தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தை தண்டனை மூலம் பறித்த தலம் 
* சூரியனுக்கு தனி சன்னதி இங்கு உண்டு. 
* நவகிரகத்திற்கென்று சந்நிதி இல்லை.
* கருவறைச் சுவரில் தட்சன் சிவனாரை வழிபடும் புடைப்புச் சிற்பம் 
* இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.
* இத்தலத்தின் நாயகராக சிறப்புடன் திகழ்பவர் தட்ச சம்ஹாரமூர்த்தியான வீரபத்திரரே . தெற்கு நோக்கி திருக்காட்சி தரும் இவ் வீரபத்திரர் உற்சவ மூர்த்தம் பேரழகு வாய்ந்தது . இவரது காலடியில் தட்சன் வீழ்ந்து கிடப்பதை காணலாம் . இத்திருமேனி அமைந்துள்ள மேடையில் செப்புத் தகட்டில் தட்சன் யாகம் செய்வது போலவும் , பிரம்மன் இருப்பது போலவும் புடைப்புச் சிற்பம் உள்ளது 
* தட்ச சம்ஹாரமூர்த்தி சந்நிதி அருகில் நடராஜர் சபை 
* மூலவர் பெரிய திருமேனியராக சதுரபீட ஆவுடையாரில் கோமுகம் திசை மாறியுள்ள அமைப்புடன் மேற்கு நோக்கி திருக்காட்சி 
* உள் பிராகாரத்தில் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. 
* கோஷ்டமூர்த்தங்களாகத் துர்க்கை, பிரம்மா, லிங்கோற்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தனவிநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. 
* சுப்பிரமணியர் திருவுருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளது. 
* வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி 
*  பழமையான கோயில்.
* கோயில் எதிரில் சாலையில் (மறுபுறத்தில்) விநாயகர் கோயில் உள்ளது. இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சன்னதிதெரிகின்றது.
* கொடிமரம் இல்லை. நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். 
* இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 
* இங்கு இறைவனுக்கு தயிர்சாதம், சுத்தன்னம் நைவேத்யம் செய்கின்றனர்.
* மயில்மீது காலூன்றி நிற்கும் முருகர் , சோமாஸ்கந்தர் , விநாயகர் , சந்திரசேகரர் முதலானோரின் மூர்த்தங்கள் அழகு நிறைந்தவை
* அம்பாள் தனிச்சந்நிதி கொண்டு தெற்கு நோக்கி திருக்காட்சி 
* நவக்கிரகங்கள் இல்லை . சூரியன் மட்டுமே உள்ளார் 
* பைரவருக்கு அர்த்தஜாம பூஜை சிறப்புடன் நடைபெறும் தலம் 
* கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி புறப்பாடுத் திருவிழா 
* தாரகன் என்னும் அசுரனால் தேவர்களுக்கு ஏற்பட்ட பயம் நீங்கிய தலம் 
* சவுனகர் சாபத்தால் வேடுவனாய்த் திரிந்த புற்கலன் சப்த முனிவர்களின் குடை , திருவடி முதலியவற்றை பறித்துக் கொண்ட தலம் 
* வழிபடும் பக்தர்களின் பாவத்தை சிவனார் போக்கியருளும் தலம் 
* மூல சிவனாரின் தரிசனம் சகலவித தோஷங்களையும் போக்கி , கடன் தொல்லைகளை நீக்கி , செல்வச் செழிப்பை தரவல்லதாக சொல்லப்படுகிறது 
* தட்ச சம்ஹாரமூர்த்திக்கு வருடத்தில் ஆறு முறை தமிழ் வருடப்பிறப்பு , ஆடிப்பிறப்பு , ஐப்பசிப்பிறப்பு , புரட்டாசி சதுர்த்தி , தைப்பிறப்பு , வைகாசித் திருவோணம் முதலிய நாட்களில் அபிஷேகம் நடைபெறுகிறது
* கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சிவன் வீதி உலா வருகிறார்.
* சிவபெருமான் வீரச்செயல் புரிந்த தலம் என்பதால் அனைத்து வித தோஷ நிவர்த்திக்கும் இங்குவந்து வழிபடுதல் சிறப்பு.
* தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்கு வரம் அளிக்கிறார் சிவன். ஆனால் வரம் பெற்ற கர்வத்தால் சிவனையே மதிக்காமல் யாகம் செய்கிறான். இதனால் கோபம் அடைந்த சிவன் அவனிடமிருந்து வரத்தை பறித்து விடுகிறார். இதனாலேயே இத்தலம் திருப்பறியலூர் ஆனது. சிவனின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன். அவன் யாகம் நடத்தும் போது தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்துகிறான். தன்னை மதிக்காமல் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் அழித்ததுடன் தக்கனையும் வீரபத்திரர் மூலம் தண்டித்த தலமே திருப்பறியலூர் ஆகும். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.

தரிசன நேரம் 

காலை 09.00 - 12:00 &
மாலை 05:30 - 07:00 

தொடர்புக்கு 

04364-281197 , 
04364-205555 , 
04364-287429

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் செம்பனார் கோயிலை அடைந்து , அங்கிருந்து நல்லாடை செல்லும் வலப்புறச் சாலையில் சுமார் 2 கிமீ பயணித்து , அங்கிருந்து மீண்டும் வலப்புறமாகச் செல்லும் குறுகலான ஒருவழிப்பாதையான பரசலூர் சாலையில் சுமார் 2 கிமீ பயணித்தால் சாலையோரத்திலேயே அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்லும் பாதை மோசம். கோவில் வனத்தில் உள்ளதால் ஆள்அரவம் இருக்காது. முடிந்தவரை வெளிச்சத்தில் செல்வது நன்று. குருக்கள் காலை 9.00மணிக்கு மேல் தான் வருவார். மார்கழியில் மட்டும் 7.00மணிக்கு திறக்கப்படம்

ஸ்ரிநாத்குருக்கள். 9443785616 9943348035, 9626552835 

நன்றி எஸ்.ராஜா. (அக்னி) 

தொகுப்பு.

5.திருவிற்குடி  வீரட்டானேஸ்வரர்

அட்ட வீரட்டத்தலங்களுள் ஓன்று.இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை.

சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.



இறைவர் திருப்பெயர் : வீரட்டானேசுவரர், வீரட்டானேஸ்வரர்,
இறைவியார் திருப்பெயர் : ஏலவார் குழலம்மை, பரிமள நாயகி்,
தல மரம் :துளசி்,
தீர்த்தம் : சக்கர, சங்கு தீர்த்தங்கள்
வழிபட்டோர் :திருமால், சலந்தரனின் மனைவி பிருந்தை,
தேவாரப் பாடல்கள் :திருஞானசம்பந்தர்,

தல வரலாறு:


அட்ட வீரட்டத்தலங்களுள் ஓன்று.

இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான்.

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி  தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.


அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன், ""தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்,'' என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். ""இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்,'' என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், ""என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,'' என சவால் விட்டான்.

இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், "" நீர் ஜலந்தராசூரனைப் போல்  வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், ""நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,'' என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது.

இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதைப் பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால், சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் இரண்டு பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார்.

ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. நல்லபடித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம். தீர்த்தக்கரையில் விநாயகர் கோயில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலப்புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாகவுள்ளது. வெளிப்பிராகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிராகாரத்தில் வலமாக வரும்போது மகாலட்சுமி, வள்ளி தெய்வயானையுடன் சுப்பிரமணியர் பள்ளியறை, பைரவர், சனிபகவான், தனிக் கோயில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்நிதி, ஞானதீர்த்தமென்னும் கிணறு, பிடாரி முதலிய சந்நிதிகள் உள்ளன. சலந்தரனைச் சம்ஹரித்தமூர்த்தி - 'ஜலந்த்ரவதமூர்த்தி - தலச்சிறப்பு மூர்த்தி (உற்சவத்திருமேனி) தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று. வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான்மழு ஏந்தி, ஒருகை முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி - வலமாக வந்து நேரே சென்றால் மூலவர் சந்நிதி.

முன்னால் இடப்புறம் அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் அமைந்த நான்கு திருக்கரங்கள். எதிரில் நந்தி உள்ளது. அம்பாள் சந்நிதியின் எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு ராசிகளம் உரிய கட்டமைப்பில் அமைக்கப்ட்டுள்ளன. அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது மண்டபத்தின் இடப்பால் நடராஜ சபை. எதிரில் (தெற்கு) வாயிலும் சாளரமும் உள்ளன.

துவார பாலகரைத் தொழுது, தூவர கணபதி, சுப்பிரமணியரை வணங்கியுட் சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் - சுயம்பு. சதுர ஆவுடையார், மூர்த்தியின் பாணம் உருண்டையாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக, பிரம்மா, மகாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர் ஆகியோர் உளர் .சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன


போன்:  +91-94439 21146

அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு (1) திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் (SH23) வெட்டாறு தாண்டி, கங்களாஞ்சேரிக்குப் பிரியும் வலப்புறப் பாதையில் திரும்பி கங்களாஞ்சேரி அடைந்து, நாகப்பட்டினம், நாகூர் செல்லும் சாலையில் (SH148) வலதுபுறம் திரும்பி விற்குடி ரயில் பாதையைக் கடந்து விற்குடியை அடைந்து, "விற்குடி வீரட்டேசம்" என்னும் பெயர்ப் பலகை காட்டும் பாதையில் இடப்புறமாகத் திரும்பி 2 கி.மீ. சென்று, இடப்புறமாகப் பிரியும் (வளப்பாறு பாலத்தைக் கடந்து) சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.

(2) நாகப்பட்டினத்திலிருந்து காரைக்கால் வழியாகத் திருவாரூருக்குச் செல்லும் பேருந்தில் வந்து, விற்குடியில் கூட்டு ரோடில் இறங்கி 1 கி.மீ. சென்றும் கோயிலை அடையலாம். கோயில் வரை பேருந்து, கார் செல்லும். திருவாரூரிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்

தொடர்பு 8870887717

நன்றி எஸ்.ராஜா.(அக்னி)
தொகுப்பு

6. திரு வழுவூர் வீரட்டானேஸ்வரர்

மூலவர்–வீரட்டேஸ்வரர், கஜசம்ஹாரமூர்த்தி, கஜாரி,
கிருத்திவாசன், ஞானசபேசன்

அம்மன்–பாலகுஜாம்பிகை, இளமுலை நாயகி, இளங்கிளை நாயகி

தல விருட்சம்  தேவதார

தீர்த்தம்–பஞ்சமுக தீர்த்தம்
பழமை–2000 ஆண்டுகளுக்கு முன்ஊர்–வழுவூர்மாவட்டம்–நாகப்பட்டினம்மாநிலம்–தமிழ்நாடு

இது சோழநாட்டுத் தலம்.    மயிலாடுதுறை.  – திருவாரூர்ப் பேருந்துச் சாலையில்,  மங்கநல்லூருக்கு முன்னால் ‘வழுவூர் பெயர்ப் பலகை’ உள்ள
இடத்தில்   திரும்பி,   2 கி.மீ. சென்றால் இவ்வூரை அடையலாம். கோயில் வரை பேருந்தில் செல்லலாம். அட்ட வீரட்டத் தலங்களுள் இதுவும் ஒன்று. “வழுவூர் வீரட்டம்” என்றழைக்கப்படும். இது பாடல் பெற்ற தலமன்று. இத்தலத்துக்குரிய மூர்த்தி ‘கஜசம்ஹாரமூர்த்தி’ யாவார்.


யானை– அதி உன்னதமான அறிவாற்றலுக்கும், அளவற்ற வலிமைக்கும், வீரத்துக்கும் அடையாளம். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் பழக்கம் உடையது. காட்டு விலங்கு ஆயினும் மனிதருடன் நன்கு பழகும் யானை, சில நேரம் மதம் தலைக்கேறி தன்னை வளர்த்தவனையே கொன்றும் விடுகிறது. நமது சமய வழிபாட்டில் அறிவின் சின்னமாக யானை போற்றப்படுகிறது. இறைவன், அறிவை விளக்கி நிற்கும் கோலத்தில்– யானை மீது பவனி வருபவனாகக் காட்டப்படுகிறார். அவர், அறியாமையையும் அகந்தையையும் அழிப்பவராக இருக்கும்போது யானையின் தோலை உரித்துக் கொல்பவனாகக் காட்டப் படுகிறார். இதற்கு, ‘சிவபராக்ரமம்‘ என்ற நூலில் அருமையான வரலாறு காணப்படுகிறது.

தாருகாவனத்தில் வாழ்ந்த ரிஷிகள், ‘வேதங்களில் கூறப்பட்டுள்ள யாக – ஹோமங்களைச் செய்தாலே போதும்; கடவுள் வழிபாடு தேவை இல்லை. யாக விதிகளைக் கடைப்பிடித்து அதனை ஒழுங்காகச் செய்து விட்டால், அதற்குக் கட்டுப்பட்டு அந்த யாகத்துக்கு உரிய தேவர்கள், யாகம் செய்தவர்களுக்கு வேண்டியதைத் தர கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்‘ என்ற கர்வத்தினால் சிவ வழிபாடும் அவசியம் இல்லை என்று கருதி, சிவபெருமானை அவமதிப்பவர்களாக இருந்தனர். ‘யாகத்தைத் தவிர வேறு தெய்வமில்லை‘ என்று கர்ம காண்டத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்ததால் அவர்கள் ‘கர்ம காண்டவாதிகள்‘ எனப்பட்டனர். அவர்களது கர்வத்தை அகற்றி, உண்மையை உணர்த்த திருவுளம் கொண்டார் சிவபெருமான். அதன்படி திருமால், பெண் வேடத்தில் – மோகினியாக உடன் வர, தான் திகம்பரராக திருமேனி கொண்டு, ஆடியும், பாடியும் வரும் குள்ள பூதங்கள் சூழ தாருகாவனத்தை அடைந்தார் சிவனார். திகம்பரரின் பிரகாசமான அழகையும், வாலிப வனப்பையும் கண்டு அவரது பேரழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள், அவரைப் பின்தொடர்ந்தனர். மோகினி வடிவம் கொண்ட திருமால், ரிஷிகள் தவம் செய்யும் யாகசாலைக்குச் சென்று ஆடிப் பாடினார். மோகினியின் பேரழகில் தங்களை மறந்த ரிஷிகள் தம்வசம் இழந்தனர். அவர்கள் மனத்தில் மோகாக்னி மூண்டிருந்ததால், தாம் வளர்த்த யாகாக்னியை முற்றிலும் மறந்தனர். அந்த வேளையில் ஆணழகனான திகம்பரர் ஆடியும் பாடியும் அங்கு வர, அவர் பின்னால் முனிவர்களது மனைவியரும் உடன் வருவதைக் கண்டனர்.
”நாங்கள் தவம் செய்யும் இடத்துக்கு ஏன் வந்தாய்?” என்று திகம்பரரை நோக்கி ரிஷிகள் கேட்கவும், தாமும் தம் மனைவி மோகினியுடன் அங்கே தவம் செய்ய வந்ததாகக் கூறி, சிரித்தார்.


”இவள் உன் மனைவியா? மற்றவர்களை மயக்கித் திரிகிறாளே. நன்றாக இருக்கிறது இவள் கற்பு” என்று பரிகசித்தனர் ரிஷிகள். உடனே திகம்பரர், ”நீங்கள் உங்கள் மனைவியோடு வாழ்ந்து கொண்டுதானே தவம் செய்கிறீர்கள். உங்கள் மனைவியரது மன அடக்கத்தையும், கற்பின் திறனையும்தான் இப்போது நீங்களே பார்க்கிறீர்களே. நீங்கள் மட்டும் என்ன? என் மோகினியிடம் மயங்கி, உமது யாககாரியங்களை விட்டு ஓடி வந்து விட்டீர்கள். என் மனைவியின் கற்புக்கு என்ன பங்கம் வந்து விட்டது?” என்று கைகொட்டி சிரிக்கவும், ரிஷிகள் செய்வதறியாது திகைத்தனர்.
பிறகு, மோகினியுடன் அங்கிருந்து புறப்பட்ட திகம்பரர் வசிஷ்ட மகரிஷியின் ஆசிரமத்துக்குச் சென்றார். வந்தவர்கள் யார் என்று உணர்ந்த வசிஷ்டர் தம்பதியினர் அவர்களுக்கு ஆசனம் அளித்து, அமரச் செய்து பூஜை செய்தனர். பிறகு, சிவபெருமானும் திருமாலும் தமது இருப் பிடம் சென்றனர். தம்மை அவமதித்த திகம்பரரது செயலையும், தம் மனைவியரது மன அடக்கம் கேலிக்கு உள்ளாக்கப்பட்டதையும் கண்ட ரிஷிகள் கோபம் கொண்டனர். தீய வேள்வி ஒன்று செய்து, அதிலிருந்து பெரிய பூதத்தைத் தோற்றுவித்து திகம்பரரை கொன்றுவிடத் திட்டமிட்டனர். அதன்படி அவர்கள் தொடங்கிய யாகத்தில் முதலில் ஒரு நெருப்புக் கோளம் வந்தது. அதை, திகம்பரரை அழிக்கும்படி ஏவினர் ரிஷிகள். திகம்பரராகிய சிவபெருமான் அதைத் தம் கையில் ஏந்தினார். தொடர்ந்து அவர்கள் அனுப்பிய பாம்பு, டமருகம் ஆகியவற்றையும் கைகளில் ஏந்தி, மண்டையோட்டை மாலையாகவும் அணிந்தார் சிவனார். இவை தவிர, யாகத்திலிருந்து அவர்கள் அனுப்பிய சிங்கத்தை உரித்து, தமது கச்சாக அணிந்தார். பிறகு, பெரிய கருவண்டு ஒன்றை அனுப்பினர். சிவ பெருமான், ஹூங்காரம் செய்து அதனைத் தமது நடனத்துக்கு சுருதி கூட்டுமாறு செய்தார். வலிமையான பூதத்தை அவர்கள் ஏவ, அதைத் தனக்கு ஏவலனாக ஆக்கினார். அறியாமையின் வடிவானவனும், அநேக நோய்களை உண்டு பண்ணுபவனுமாகிய ‘முயலகன்‘ என்ற குட்டை பூதத்தை அனுப்பினர். பெருமான் அவனைத் தமது திருவடியின் கீழ் பாத மனையாக்கிக் கொண்டு, அவன் மேல் நடனமாடினார். தங்களது முயற்சி எதனாலும் சிவபெருமானை அடக்க முடியாத முனிவர்கள், யாகத் தீயிலிருந்து மிகப் பெரிய முரட்டு யானையைத் தோற்றுவித்து அனுப்பினர். அது கயிலைக்குச் சென்று, அங்கு யோகத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானைப் பற்றி எடுத்து தம் வாயில் போட்டு விழுங்கியது. சிவபெருமான் சிறிது நேரம் திருவிளையாடல் செய்யச் சித்தம் கொண்டார்.


அப்போது உலகமெங்கும் இருள் சூழ்ந்தது. தேவர்கள் பயந்தனர். தாருகாவனத்து ரிஷிகள் வெற்றிக் களிப்பில் ஆடினர். சிவபெருமான் யானையின் வயிற்றில் கொடிய வெப்பத்தை உண்டாக்கினார். அது வயிற்று வலியால் துடித்துப் புரண்டது. பல இடங்களிலும் அலைந்து திரிந்து இறுதியில் பஞ்சப்பிரம்ம தீர்த்தத்தில் வீழ்ந்தது. பெருமான் தமது உடலைப் பெருக்கி யானையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தார். அதன் தோலை உரித்து அதைப் போர்வையாகப் போர்த்திக் கொண்டார். இதனால் அவர் “கஜசம்ஹாரர், கிருத்தி வாசர், கரி உரித்த பெருமான்” என்று புகழப் பெற்றார். தீய வேள்விக்குத் துணை நின்ற வேத புருஷன், மான் வடிவம் கொண்டு சிவபெருமான் காலில் வீழ்ந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்ட, அந்த மானைத் தம் இடக்கரத்தில் ஏந்தி, எந்த நேரமும் தமது காதில் வேதம் ஓதுமாறு பணித்தார்.


வேத புருஷனும், யாக புருஷனும் தங்களை விட்டு விலகியதாலும், சிவபெருமான் மற்றும் திருமாலை நிந்தித்த பாவத்தாலும் தீய வேள்வியின் பயனாலும் கடுமையான ஜுரம், நடுக்கம் முதலியன அடைந்து வருந்திய தாருகாவனத்து ரிஷிகள் இறுதியில் சிவனைச் சரணடைந்தனர். ஈசன் அவர்களை மன் னித்து சிவஞானம் உபதேசித்தார்.


சிவபெருமான் யானையை உரித்து, அதன் தோலைப் போர்வையாக அணிந்து கொண்டது, அட்ட வீரட்டச் செயல்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இது, சிவமகா புராணங்களிலும், திருமுறைகளிலும் விரிவாகக் குறிப்பிடப் பெறுகிறது. சில்பரத்தினம், சுப்ரபேதாகமம், அம்சுமத் பேதாகமம் முதலிய சிவாகமங்களில் கஜ சம்ஹார மூர்த்தியின் வடிவமைப்பு விளக்கப்பட்டுள்ளன.

அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்றான வழுவூரில், கஜசம்ஹாரம் நிகழ்ந்ததாக தல புராணம் விவரிக்கிறது. ‘வழுவை‘ என்பதற்கு யானை என்றும் ஒரு பொருள் உண்டு.

வழுவை– யானையை உரித்த ஊர்– வழுவூர் என்பர்.


இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது – கிழக்கு நோக்கியது. அழகான ராஜகோபுரம். கோயிலின் முன்பு பஞ்சமுக தீர்த்தம் எனப்படும்
குளம் உள்ளது. விசாலமான உள் இடம். உள்ளே நுழைந்தால் நந்தியும், முன்னால் விநாயகரும் உள்ளனர். அடுத்துள்ள உள்வாயிலைத் தாண்டினால் வீரட்டேஸ்வர சுவாமி தரிசனம். துவார கணபதி, துவாரசுப்பிரமணியரை வணங்கி, வாயில் நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம் உள்ளது. கொடி மரத்து விநாயகர் உள்ளார். கொடிமரத்தின் வலதுபுறம் சஹஸ்ரலிங்கமும், வலக்கோடியில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளன. உள் வாயிலில் உள்ள துவார கணபதியையும், சுப்பிரமணியரையும் வணங்கி, இருபுறமும் சுதையாலான துவாரபாலகர்களையும் தொழுது, சென்றால் முன் மண்டபத்தை அடையலாம். உள் பிராகாரத்தில் வலம் வரும்போது, வரிசையாக சண்டேசுவரர், விநாயகர், நால்வர், இரு கணபதிகள், தொடர்ந்து அறுபத்து மூவரின் மூல உருவங்கள், தல விநாயகர் ஆகியோர் உள்ளனர். அடுத்து, ‘உமைமுருகுடையான் சந்நிதி’ உள்ளது. தொடர்ந்து ஜேஷ்டாதேவி, நாகர்கள், பிடாரி, சப்தமாதர் வழிபட்ட லிங்கங்கள், பைரவர்கள் சந்நிதிகள் உள்ளன. அடுத்து வள்ளி தெய்வயானை சுப்பிரமணியரும், பக்கத்தில் பாலசுப்பிரமணியரும், கஜலட்சுமியும் உள்ளனர். இவற்றையடுத்து பிராகாரச் சுற்றில் விக்கிரமசோழன் அருள் பெற்ற வரலாறு, அழகான வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களும் தற்போது அழிந்த நிலையில் உள்ளன. தொடர்ந்து பிராகாரத்தில் சனிபகவான், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரகங்கள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பால் பிட்சாடனர் உருவம் உள்ளது. பெரிய அருமையான திருமேனி. பக்கத்தில் மோகினி உருவம் உள்ளது. வாயில் நுழைந்ததும் வலப்பால் ‘கஜசம்ஹாரமூர்த்தி’ தரிசனம் தருகின்றார். இம்மூர்த்தி மிகவும் அழகு வாய்ந்ததாக உள்ளது. யானையின் தோலுரித்து, யானையை அழித்து, சிரசின் மீது சுற்றியவண்ணம், இறைவன் வீர நடனமாடுகின்றார். யானையின் வால்புறம் சிரசின் மீது தெரிகிறது. திருமேனி ஓங்கார வடிவில் அமைந்துள்ளது. கைவீசி திருவடிகள் முருக்கியவாறு, மடித்து, திருவடியின் உட்புறம் (புறங்கால் பகுதி) தெரியுமாறு நடனமாடுவது அற்புதம். புறங்கால் தரிசனத்தை இங்கு, இம்மூர்த்தியில் கண்டு தொழுது களிக்க முடிகிறது. இத்திருமேனிக்குப் பக்கத்தில் அம்பாளின் திருமேனி அதியற்புதத்தோடு திகழ்கின்றது. ஒரு பாதத்தைச் சற்று திருப்பி, நடந்து செல்ல முயலும் கோலத்தில் உள்ளது. அம்பாளின் இடுப்பில் முருகப்பெருமான் காட்சி தருகின்றார். அவருடைய ஒரு விரல் பக்கத்தில் உள்ள மூர்த்தியைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் உள்ளது. இதுவும் உற்று நோக்குவார்க்கு மகிழ்ச்சியளிக்கும்.

தன் கணவன் இல்லாமையால், வழியின்றித் திகைத்த அம்பிகை, தன் தந்தை வீட்டிற்குச் செல்வதற்கு முயன்றார். அப்போது இறைவன் எழுந்து வெளிப்படவே, குமரனாகிய முருகப் பெருமான், தன்தாய்க்கு, ‘இதோ தந்தையார்’ என்று சுட்டிக் காட்டினாராம். (வீட்டிற்குச் செல்ல புறப்படும் நிலையில் திருவடியைத் திருப்பி நிற்கும் அம்பிகையின் நிலையும், தந்தையைச் சுட்டிக் காட்டும் அமைப்பில் இடுப்பில் உள்ள முருகனின் அமைப்பும் கண்டு வியத்தற்குரியது) வெளியே வந்தால் நேரே மூலவர் தரிசனம். கிழக்கு நோக்கியது, சுயம்புத் திருமேனி. நாககவசத்தில் தரிசிக்க மிகவும் அருமை. சுவாமி சந்நிதிக்கு இடப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. தனிக்கோயில், அம்பாள் நின்ற கோலம், அபய வரதத்துடன் கூடிய அட்சமாலை, பத்மம் ஏந்திய நான்கு திருக்கரங்கள். ஆலயத்தில் நாடொறும் ஆறுகாலபூஜைகள் நடைபெறுகின்றன. சுவாமி மண்டபத்தில் அட்ட வீரட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கோவில் நேரம். காலை 6=30 -12=00வரை
மாலை 4.30- 8.00 மணி வரை.

குருக்கள். பாலசுப்பிரமணிய சிவம் 9443071764. 9080787133


தொகுப்பு  நன்றி எஸ்.ராஜா (அக்னி)

7. திருக்கொற்க்கை வீரட்டானேஸ்வரர்

இறைவன்: ஸ்ரீவீரட்டேஸ்வரர்.

இறைவி: ஞானாம்பிகை.

உற்சவர்: யோகேஸ்வரர்.

விநாயகர்: குறுக்கை விநாயகர்.

புராணப்பெயர்: திருக் குறுக்கை.

ஊர்: கொற்கை.

தலவிருட்சம்: கடுக்காய் மரம். (அரிதகி வனம்).

தீர்த்தம்: திரிசூலகங்கை பசுபதி தீர்த்தம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தேவாரப் பாடல்பெற்ற சிவத் தலங்கள் 274-ல் காவிரி வடகரைத் தலங்களில் 26-ஆவதாகத் திகழ்வதும், தருமபுர ஆதீனத்தின் அருளாட்சியின்கீழ் சிறப்பாக இயங்கிவருவதும், அப்பரால் பதிகங்கள் பாடப்பட்ட பெருமையுடன் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெரும் சிறப்புகளுடன் இன்னும் பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்குவதுமான தலம்தான் கொற்கை வீரட்டேஸ்வரர் திருக்கோவில்.


“நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து

ஆற்றுநீர் பூரித்தாட்டும் அந்தணனா

ரைக் கொல்வான்

சாற்றுநாள் அற்றதென்று தருமரா சற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கை வீரட்டனாரே



 கொற்கை சிவாலயம்.

தீர்க்கவாகு என்ற முனிவர் இங்குள்ள இறைவனை திருமுழுக்காட்ட ஆகாய கங்கையைப் பெற தம் நீண்ட கைகளை நீட்ட, அவை இறையருளால் குறுகிவிட்டனவாம். இதனால் இத்தலம் குறுக்கை என அழைக்கப் பட்டதாம்.

தல வரலாறு

முற்காலத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் சூரபத்மன், தாரகாசுரன் ஆகியோர் கடுமையான துன்பம் கொடுத்துவந்தனர். அவர்களிடமிருந்து தேவர்களைக் காப்பாற்ற சிவபெருமானால் மட்டுமே முடியும். இதற்காக அவர் உமையம்மையைத் திருமணம் புரிந்து ஒரு குமாரனை அளிக்கவேண்டும். அதற்கு சிவபெருமானின் தவநிலையைக் கலைக்க வேண்டும். எனவே சிவபெருமானின் மோனநிலையைக் கலைத்து காமப்பற்றை விளைவிக்க பிரம்மா, இந்திரன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கி மன்மதன் கயிலைக்குச் சென்றான். நந்தியெம்பெருமான் அனுமதி யுடன் சிவபெருமான் இருந்த இடத்தை அணுகினான்.

இறைவனிருந்த தவநிலையைக் கலைக்க மன்மதன் பஞ்சபாணங்களை எய்தான். அந்த மலரம்புகள் இறைவன் மீது பட, அவர் மன்மதனை சிறிதே பார்த்தார். அந்த அளவில் இறைவனின் நெற்றிக்கண் மன்மதனை சுட்டெரித்தது. மன்மதன் சாம்பலானான். (காமனைத் தகனம் செய்த இடம் விபூதிக்குட்டை என்ற பெயரில் இத்தலத்தின் அருகே உள்ளது. இங்குள்ள மணல் விபூதியாகவே காணப்படுகிறது.) இறைவன் உமாதேவியை மணம் செய்துகொண்டபின்னர், மன்மதனின் மனைவி ரதியின் வேண்டுகோளின்படி அவனை உயிர்ப்பித்தார். மன்மதன் பிறரின் கண்களுக்குத் தெரியாமல் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும்படி இறைவன் வரமளித்தார்.

இந்த தலத்தைச் சுற்றியுள்ள பல ஊர்கள் காமனைக் கண்ணால் எரித்த செயலுடன் இணைத்துப் பேசப்படுகின்றன. இறைவன்மீது மலரம்புகளை எய்யச் சென்ற மாரவேளின் செயலைக் காண தேவர்கள் குழுமியிருந்த இடம் தேவனூர்; காமன் சிவபெருமானின் யோகநிலையைக் கலைக்க கங்கணம் கட்டிய இடம் கங்கணப்புத்தூர்; மன்மதன் வில்லைத் தயார் செய்த இடம் வில்லியனூர்; ஐந்து மலரம்புகளைத் தயார் செய்த இடம் ஐவநல்லூர் (பஞ்சபாணநல்லூர்)  வில்லில் நாணேற்றிய இடம் நாணேற்றுப்பாக்கம்; அம்பை எய்யக் காலை வளைத்த இடம் கால்வளைமேடு என்று அழைக்கப் பெறுகின்றன.

காமனது உயிரைக் கவர காலன் தங்கிய ஊர் கூற்றுவன்வாணி; மதன் சோர்ந்து வீழ்ந்த இடம் சோர்ந்தமங்கலம் என்றும் கூறப்படுகின்றன. இங்கிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் காமன் நீறாக எரிக்கப்பட்ட திருநீற்றுக்குழி உள்ளது. அது தான் தற்பொழுது விபூதிக்குட்டை எனப் படுகிறது.

✷ இங்கு மூலவரான சிவபெருமான் யோகேஸ்வரர், வீரட்டேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு மேற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

✷ யோகீஸ்வரர் என்ற பெயர் கொண்ட உற்சவராக உள்ள காமதகன மூர்த்தி இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் அபயமுத்திரை யுடன், இடக்கையை மடக்கிய கால்மீது வைத்து, அமர்ந்த திருக்கோலத்தில் காட்சிதருவது தனிச்சிறப்பு.

✷ மன்மதன் எய்த பஞ்சபாணங்களில் ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள தழும்பை லிங்கப்பெருமான்மீது இன்றும் காணலாம். இந்த வீரட்டேஸ்வரரை தரிசனம் செய்யும்போது ஈசன் யோகத்தில் அமர்ந் திருப்பது போன்றே சிவலிங்கம் காட்சி யளிப்பது கூர்ந்து நோக்குபவர்களுக்குத் தெரியும்.

✷ சிவன் யோகமூர்த்தியாக இருப்பதால் நினைத்தவுடன் சென்று எளிதில் பார்க்க வியலாது. எப்படியாவது தடங்கல் வந்துவிடும்.

அதையும்மீறி நாம் சுவாமியை தரிசித்து விட்டால் நமக்கு யோகநிலை கைகூடும். சுவாமி அனுக்கிரக மூர்த்தியாக உள்ளதால், தெரியாமல் தவறு செய்தவர்கள் இவரை வணங்கினால் தவறை மன்னித்து அனுக் கிரகம் புரிகிறார்.

✷ அம்பாள் ஞானாம்பிகை என்னும் திருநாமம் கொண்டு ஆளுயரத் திருமேனி யாக மேற்கரங்களில் அட்ச மாலை, தாமரைப்பூவுடனும், கீழ்க்கரங்கள் அபய வரத கரங்களாகக்கொண்டு, தெற்கே திருமுக மண்டலமாக நின்ற கோலத்தில் அருள் புரிவது சிறப்பு.

✷ க்ஷேத்திர கணபதியாக உள்ள குறுக்கை கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி நாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

✷கல்யாண வரம் வேண்டுவோர் அம்மனுக்கு கல்யாணமாலை சாற்றுகிறார் கள்.புதுப்புடவை சாற்றுதல், அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு சாற்றுதல் போன்ற முக்கிய நேர்த்திக்கடன்களைச் செய்கிறார்கள்.

✷ மகாவிஷ்ணுவின் புத்திரனாக விளங்கிய மன்மதனை சிவன் எரித்து சாம்பலாக்கியதால் புத்திர சோகத்தில் ஆழ்ந்த மகாவிஷ்ணு, திருக்குறுக்கை வந்து இறைவனை வணங்கி புத்திர சோகத்திலிருந்து மீண்டு ஆறுதல் பெற்றார். ஆகவே இத்தலம் புத்திர சோகம் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது.

✷ அப்பர் பெருமானால் பதிகங்கள் பாடப்பெற்றதுடன், மகாவித்வான் மீனாட்சி சுந்தரரும் பாடியுள்ளதாகத் தலபுராணம் கூறுகிறது.

✷ மாசி மகம், காமதகன விழா பத்து நாட்கள், பிரம்மோற்சவம் போன்ற விழாக்களுடன், பஞ்சமூர்த்திகள் புறப் பாடு, மார்கழித் திருவாதிரை, வீதியுலா, சுவாமி புறப்பாடு ஆகிய விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

✷முதலாம் ராஜராஜன், விக்ரம சோழன், கோப்பெருஞ்சிங்கன், விஜய நகர வேந்தன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் காலத்திய 21 கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் காணப் படுகின்றன.

✷ தொடர்ந்து ஐந்து பிரதோஷங்கள் வழிபாடு செய்தால் காமக்குரோதங்கள் விலகி யோகநிலையை அருளக்கூடியவர்தான் இந்த கொற்கை வீரட்டேஸ்வரர்.

திருக்கோவில் அமைப்பு

காவிரி வடபகுதியில் சுமார் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அழகான ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கி வீரட்டேஸ்வரசுவாமி கோவில் காட்சியளிக்கிறது. எதிரில் திரிசூலகங்கை என்னும் பசுபதி தீர்த்தக்குளம் உள்ளது. ராஜகோபுரத்தில் கண்கவரும் வண்ணம் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் அமைந்துள்ளது.

மகாமண்டபத்தில் அழகிய விமானத் தின்கீழ் காமதகன மூர்த்தியை தரிசிக்கலாம். கருவறையில் யோக நிலையில் மேற்கு நோக்கி வீரட்டேஸ்வரர் அருட்காட்சியளிக்கிறார்.

குறுங்கை முனிவர், குறுங்கை விநாயகரும் கஜபிருஷ்ட விமானத்தின்கீழ் அருட்காட்சி தருகின்றனர்.

மகாமண்டபத்தின் மேல்தளம் அனைத்தும் முற்கால அரண்மனை விதானக் கூரைகள் போன்றே உள்ளன. சுவாமியின் கர்ப்பக்கிரக விமானத்தில் இறைவன் யோகத்தில் இருப்பது, மன்மதன் மலர்களைத் தொடுப்பது, காமனை இறைவன் எரிப்பது போன்ற நிகழ்வுகள் சுதைச் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் மன்மதன், ரதி திருவுருவங்களும் உள்ளன.

இறைவன் தாட்சாயணியைப் பிரிந்து தவம்புரியத் தகுந்த இடம் இதுதான் என்று எழுந்தருளிய தலமாம்- பிரம்மன் பொய் கூறியதை இறைவன் மன்னித்த இடமாம்- ராமன் பிதுர்க்கடன் ஆற்றிய தலமாம்- புத்திர சோகத்தைப் போக்கி புத்திர வரம் கிடைக்கும் வகையில் புத்திர காமேஷ்டி யாகம் நடக்கின்ற தலமாம்- அன்பு, பிரியம், நேசம், விருப்பம் மற்றும் பாசத்திற்கு ஏங்குபவர்கள் தாங்கள் விரும்பும் நபரிடம் கிடைக்கும் வண்ணம் காமதகனமூர்த்தி அருள்கின்ற தலமாம்- ஜாதகமே பார்க்காமல் திடீரென்று திருமணம் புரிந்து பின் கருத்துவேறுபாட்டால் மனக்கஷ்டத்துடன் வாழ்பவர்களின் மனவுளைச்சலைப் போக்கி பாசத்தை வரவழைக்கின்ற தலமாம் கொற்கையில் அருளும் கொன்றைப்  பிரியனான வீரட்டேஸ்வரரை வழிபடுவோம். சுபயோக நிலையைப் பெறுவோம்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: சோமசுந்தர குருக்கள், அலை பேசி: 94435 27044, 95854 49862. அ/மி வீரட்டேஸ்வரர் திருக்கோவில், கொற்கை, நாகை மாவட்டம்-609 203.

அமைவிடம்.  மயிலாடுதுறையிலிருந்து நீடூரைக் கடந்து மணல்மேடு செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொற்கை கிராமம். (பஸ் வசதி குறைவு. பழுதடைந்த ரோடுகள். வெளிச்சத்தில் செல்வது நன்று.
வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து திருபுன்ஈங்கூர். திருசெங்கோட்டான்குடி வழியாக செல்லலாம். பகலில் செல்வது நல்லது.
நன்றி. எஸ்.ராஜா( அக்னி)
தொகுப்பு

8. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்


மூலவர்: அமிர்தகடேசுவரா் அமிர்தலிங்கேசுவரர்

உற்சவர்: காளசம்காரமூா்த்தி

தாயார்: அபிராமி தேவி

தல விருட்சம்: வில்வம், பிஞ்சிலம்(சாதி முல்லை)

தீர்த்தம்: அமிர்த புஷ்கரிணி, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம்

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 47ஆவது சிவத்தலமாகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை

இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி – நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.

அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன.

மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் இயமனை உதைத்துத் தள்ளியதலமாதலால், மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.

 தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம்.  இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.

அட்ட வீரட்டத் தலங்களுள் (இது எமனை உதைத்த தலம்) இதுவும் ஒன்று.



திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.



இப்பதியில் அவதரித்த குங்குலியகலய நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத் தொண்டைச் செய்து பேறு பெற்றார். திருப்பனந்தாளில் சாய்ந்து யாராலும் நிமிர்த்த முடியாத சிவலிங்கத் திருமேனியை தனது சிவ பக்தியால் நேராக நிமிர்த்தியவர்.

அவதாரத் தலம் : திருக்கடவூர் (திருக்கடையூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருக்கடவூர். குருபூசை நாள் : ஆவணி - மூலம் 



காரி நாயனாரும் இப்பதியிலேயே அவதரித்தவர் - இவர் அரசனிடம் சென்று பொருள்பெற்றுப் பல திருப்பணிகள் செய்து, தொண்டாற்றி முத்தியடைந்த பதி.

அவதாரத் தலம் : திருக்கடவூர் (திருக்கடையூர்) வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : திருக்கடவூர். குருபூசை நாள் : மாசி - பூராடம். 

குங்குலியக்கலய நாயனார், காரி நாயனார் ஆகியோரது திருவுருவச் சிலை இத்திருக்கோயிலில் உள்ளது.

அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த பெருமை பெற்றப் பதி.

மூவர் பெருமக்கள் பாடல் பெற்றத் திருத்தலம்.

உள்ளமுருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து - அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட அற்புதப் பதி.


அன்னை அபிராமியின் அருள் தலம்;        யம பயம் போக்கவல்ல பதி.

இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில் எமன் வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.

மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108-வது தலமாகும். (107-வது திருக்கடவூர் மயானம்)

சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி தீர்த்தத்திலிருந்து வண்டியில் கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு. ஆதலின் இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகின்றன.

மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம்; அருகிலுள்ள மணல்மேடு ஆகும்.
பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம்.

ம்ருத்யுஞ்சஹோமம், உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி(மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவாகும். (இச்சாந்திகள் வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம்மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய வேண்டும்.)

ஏழுநிலைகளுடன் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரதில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.

இங்கு தர்மராஜா (எமன்), உற்சவத் திருமேனி - சந்நிதி உள்ளது.

பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின், அநுக்ரஹம் பெற்ற (எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு (மரகதலிங்கத்திற்கு) நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.

கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷேச, பெருவிழாவில் 5, 6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ, ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றன.

கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கண்டு தரிசிக்கத் தக்கது.

இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.
( 'சிலம்பில்' வரும் நடன மகள் 'மாதவி'யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த நிலையில் உள்ளது.)

அமைவிடம் அ/மி. அமிர்தகடேசுவரர் திருக்கோயில், திருக்கடையூர் (அஞ்சல்) - 609 311. மயிலாடுதுறை (வட்டம்). தொலைபேசி : 04364 - 287429

தொகுப்பு நன்றி எஸ். ராஜா (அக்னி)



No comments:

Post a Comment